பொது பலசேனாவைப் புறக்கணித்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு

இஸ்லாமிய தீவிரவாதம் பிராந்தியத்தில் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா வின் இந்து தேசியவாத அமைப்பான ஆர்.எஸ். எஸ். என அழைக்கப்படும் ராஸ்திரிய சுயம்சேவக் அமைப்புடன் கூட்டணி ஏற்படுத்தப்போவதாகவும் இது தொடர்பில் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் சில தினங்களுக்கு முன் பொதுபல சேனா தெரிவித்திருந்தது. 

கடந்த காலங்களில் உள்நாட்டுக்குள் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக்கொண்ட பொதுபல சேனா பர்மாவின் 969 அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த அமைப்பின் தலைவர் அஷின் விராது தேரரை முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தனது தேசிய மாநாட்டுக்கு பிரதம அதிதியாக அழைத்தது. இரு அமைப்புகளும் இணைந்து செயற்படும் விதத்தில் ஒப்பந்தமும் செய்துகொண்டன.

அப்பொழுது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில் பொதுபலசேனா தூரநோக்குடன் செயற்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இதனை உறுதிப்படுத்திக்கொள்வது போன்றே இந்தியாவில் முஸ்லிம்களுக்கெதிரான அமைப்பாக இனங்காணப்பட்டுள்ள இந்துமத மரபுகளை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் செயற்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனும் பேச்சுகளை ஆரம்பித்தது பொதுபலசேனா. ஆர்.எஸ்.எஸ். உடன் பேச்சுகள் நடைபெறுவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ள நிலையில் அப்படியான நோக்கம் தனக்குக்கிடையாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிரடியாகத் தற்போது அறிவித்துள்ளது. 

பர்மாவின் 969 அமைப்புடனும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடனும் இணைந்து செயற்படுவதன் மூலம் பிராந்தியத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை முற்றாக ஒழித்துக்கட்ட முடியுமென்று பொதுபலசேனா எதிர்பார்க்கிறது. பொதுபலசேனாவை சரியாக இனம்கண்டு அதன் முயற்சிக்கு ஆப்பு வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இந்தக் கூட்டு இலங்கையில் தமிழ் – முஸ்லிம் உறவையும் பாதிக்கக்கூடியது.

2012 இல் கலபொட அத்தே ஞானசார தேரரால் ஆரம்பிக்கப்பட்டது பொதுபலசேனா. இது அரசியல்மயமாக்கப்பட்ட பௌத்த பிக்குகளின் அமைப்பு. சிங்களத் தேசியவாதம், பௌத்த மதம் இந்த அமைப்பின் குறிக்கோள். பர்மாவில் விராது தேரரின் 969 அமைப்புக்கு பர்மிய அரசின் மமுக ஆதரவு இருப்பது போன்று பொதுபலசேனாவுக்கும் இலங்கையில் அரசின் ஆதரவு அல்லது ஆசி இருந்துவருகிறது. 

பொதுபலசேனாவின் பிரதான நிவேற்றதிகாரி, ராஜபக்ஷாக்களின் மடியிலிருந்து செயற்படுபவர் என்று நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியிருந்தார். பொதுபலசேனாவுடனான தொடர்புகளை இலங்கை அரசு மறுத்தாலும் அந்த அமைப்பின் செயற்பாடுகள், சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்க் கவனத்தில் கொள்ளும்போது அரச உயர்மட்டத் தலைவர்களின் ஆசியுடன் அது செயற்படுவது உறுதியாகிறது.

இலங்கையும் பர்மாவும் பாரம்பரிய பௌத்த நாடுகள். இந்தியா இந்து நாடு. இரண்டு பௌத்த அமைப்புகளை இணைப்பது சுலபம். அந்த பௌத்த அமைப்புகளுடன் இந்து அமைப்பையும் இணைக்க ஞானசார தேரர் திட்டமிட்டதுதான் வியப்பளிக்கிறது. பிராந்தியத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை ஒழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு எந்த ஓர் அமைப்புடனும் உறவு வைத்துக்கொள்ள பொதுபலசேனா தயாராக உள்ளது. 

இதுதான் உண்மை. அதுவும் விராது தேரர் சாதாரண ஓர் ஆள் அல்லர். ~ரைம்| சஞ்சிகையின் முதல் பக்கத்தில் ~பௌத்த பயங்கரவாதத்தின் முகம்| என்ற தலைப்புடன் விராது தேரரின் படம் வெளியானபோது விராது தேரர் ஆத்திரமடைந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவராக இருக்கலாம் அதற்காக விசர்நாய் ஒன்றுக்கு அருகில் படுக்க முடியாது” – என்றார்.

முஸ்லிம் குறித்து வெளியிட்ட அவரின் கருத்து பௌத்த பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை. இவரால் பர்மாவிலோ இலங்கையிலோ முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தனது முஸ்லிம் எதிர்ப்பு நோக்குடன் பொதுபலசேனா வேறு அமைப்புகளுடனும் கூட்டுச்சேர முயற்சிக்கலாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயற்பாடு அவற்றுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template