தொடரும் சீரற்ற வானிலை ; 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை


சீரற்ற வானிலைக் காரணமாக நுவரெலியா – ஹட்டன் வீதியை பயன்படுத்துவோர் மிக அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பங்களாஹத்த பகுதியில் மண்சரிவினால் வீதியில் நிரம்பியிருந்த மண் அகற்றப்பட்டு, போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்தும் ஒருவழி போக்குவரத்து மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஹுட் ஹுட் சூறாவளியின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கே.சூரியக்குமாரன் தெரிவிக்கின்றார்.

கடற் பிராந்தியங்களும் சற்று கொந்தளிப்பாக அமையக்கூடும் என வானிலை அதிகாரி குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இன்றிரவு ஏழு மணிமுதல் நாளை இரவு ஏழு மணிவரை 24 மணித்தியாலங்களுக்கு 10 மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை எதிர்வுகூறல் மற்றும் செய்மதி நிழற்படங்களை கண்காணித்து, அதனடிப்படையிலேயே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு ஆராய்ச்சி பிரிவின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

இதற்கமைய பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகளில் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இதே மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதாகவும் சிரேஷ்ட புவியியல் நிபுணர் காமினி ஜயதிஸ்ஸ கூறினார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template