விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் பார்கள் ஒன்றும் இருக்கவில்லை: யோகேஸ்வரன்

தமிழகத்தின் முன்னாள் முதல்வருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது போன்ற நிலைமை இலங்கையில் வந்தால், பல அமைச்சர்களுக்கும், பிரதியமைச்சர்களுக்கும் இங்கு வேறு ஓர் இடத்தில் சிறைச்சாலை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தும்பங்கேணி சங்காரவேல் சனகமூக நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த கிராமத்தின் அழிவுக்கு வித்திட்டவர் தற்போது இருக்கின்ற கருணா அம்மான் அவர்கள் இதனை எவரும் மறுக்க முடியாது.

ஏனென்றால் அவர்தான் வீட்டுக்கு வீடு பிள்ளை பிடித்தவர், எமது பிள்ளைகள் சாகவும், தெருவில் கிடக்கவும், அங்கவீனர்களாக இருக்கவும், பலர் துன்பப்பட்டவர்களாகவும் வாழ அவர் சௌகரியத்தினை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலே ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டம் வந்தது இது இலங்கையில் அனைத்து பாகங்களிலும் இடம் பெற்று வருகின்றது.

ஆனால் இங்கு என்ன நடக்கின்றது, இந்த வேலைத்திட்டத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் எங்களுக்கு தரவேண்டும் என்று அவரது பிரதிநிதிகள் கேட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதனை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்ளாக இருந்தால் இதற்குரிய நடவடிக்கையை நாம் எடுப்போம்.

ஊழல் குற்றச்சாட்டில் தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக நீதிமன்றத்திலே தீர்ப்பளிக்கப்பட்டு அவர் தற்போழுது சிறையில் இருக்கின்றார்.

அவ்வாறான ஒரு நிலைமை எங்கள் நாட்டிலே வருமாக இருந்தால் அரசாங்கத்திலே இருக்கின்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கெல்லாம் தனியான சிறைச்சாலை கட்டவேண்டிய நிலை வரும், ஏன் என சிந்தித்து பாருங்கள் ஏன் என்றால் இவர்கள் லஞ்சம் மூலம் பெற்ற பெருந்தொகையான பணத்தை தான் வைத்திருக்கின்றார்கள்.அந்த பணங்கள் எந்த வழியால் வந்தது யார் இதனை தந்தார்கள்?

உண்மையிலே ஜெயலலிதா சம்மந்தமாக நான் தனிப்பட்ட முறையிலே அனுதாபம் அடைகின்றேன். காரணம் இலங்கை நாட்டு தமிழ் மக்களுக்காக துணிந்து குரல் கொடுத்த பெண்மணி. அந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது எமக்குத் தெரியாது.

இன்று அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் இங்கு செய்கின்ற வேலைகளைப் பார்த்து மயங்கி விடாதீர்கள் என அன்பாக கேட்கின்றோம். அவர்கள் கொண்டு வரும் திட்டத்தில் இலாபம் இல்லாமல் கொண்டு வரவில்லை.

எங்களது பகுதிகளில் எத்தனை சாராயக்கடை இருக்கின்றது? 66 பார்கள் இருக்கின்றது ஒரு மாவட்டத்தில் 28 பார்கள் தான் இருக்க வேண்டும் ஆனால் இங்கு 66 பார்கள் இருக்கின்றது.

அது எந்த வழியால் வந்தது என்று கேட்டால் பிரதியமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் சண்டை பிடிக்கின்றார்கள், ஏன் என்றால் அவர்கள் இருவருக்கும் இங்கு பார்கள் இருக்கின்றது எனவே இந்த பார்களுக்கு அனுமதியைக் கொடுத்தவர்கள் யார்? அவர்கள் தான் அவர்களின் உழைப்புக்காக எங்களது பகுதிகளிலே பார்களை திறந்து வைத்திருக்கின்றனர்.

இன்று படுவான்கரை பிரதேசத்தில் எட்டு பார்கள் இருக்கின்றது தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இந்த பகுதிகளில் பார்கள் ஒன்றும் இருக்கவில்லை. ஏன் இப்போது வரவேண்டும்.

இந்த பகுதியைப் பொறுத்தளவில் பல கோரிக்கைகளை முன்வைத்தோம், முதலாவதாக இங்கு 105 ஏக்கரிலே உப உணவு பயிர் செய்கை நடைபெற்றது என்ற கருத்தினை நாம் இங்கு தெரிவித்தோம்.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதனை நாங்கள் கேள்வியாக எழுப்பினோம்,. அதிலே நிச்சயமாக இதனை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக எம்மிடம் உறுதியளித்து இருக்கின்றனர்.

அது மட்டுமல்ல இரண்டு வருடமாக இப் பிரதேச மக்களின் கல்லுடைத்தால் தொழிலினை நிறுத்தி வைத்துள்ளீர்கள் அதனை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள் எனக் கேட்டுக் கொண்டோம் அதனையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

உண்மையிலே இப்பகுதி மிகவும் கஸ்டமான, பாதிக்கப்பட்ட பகுதி இந்த பகுதிக்கு உதவவேண்டியது எங்களது தலையாய கடமையாகும்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு மிஞ்சியிருப்பது கல்வி மட்டும்தான் அந்த கல்வியை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கின்றது. இதனை வளர்க்க வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கின்றது.

தமிழனை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்கு எவற்றினை அழித்தால் இல்லாமல் செய்யலாம் என சிந்தித்தது அப்போதைய அரசாங்கம் இதனால்தான் தமிழன் கல்வியிலே முன்னேறக் கூடாது என்ற ஓரே காரணத்துக்காக ஆசியாவிலே ஒரு பெரிய நூலகமான யாழ் நூலகத்தினை திட்டமிட்டு சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் எரித்தார்கள்.

அபிவிருத்திகள் சம்மந்தமாக இங்கு பேசுகின்றார்கள் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டமாக இருக்கலாம் அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமாக இருக்கலாம் இதிலே பெரிய திட்டங்களை தாங்கள் செய்வதாக காட்டுகின்றனர்.

கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் எல்லாம் அரசாங்கத்தின் நாடகம் இந்த நாடகத்திலே கிழக்கின் உதயத்தின் கதாநாயகன் யார் என்றால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் இம்முறை கிழக்கின் உதயத்திலே ஒதுக்கப்பட்ட எண்பது வீதமான பணத்தினை முஸ்லிம் பகுதிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள், 24 திட்டம் கிழக்கின் உதயத்தின் மூலம் ஒதுக்கப்பட்டது இந்த திட்டங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேச செயலாளர் பிரிவிலே பெரும்பான்மையாக வாழுகின்ற தமிழ் கிராமத்திற்கு எந்தவித திட்டமும் ஒதுக்கப்படவில்லை எந்த அளவிற்கு எமது மக்களை இந்த அரசாங்கம் ஒதுக்குகின்றது என்பதனை சிந்தித்து பாருங்கள்.

சர்வதேசத்திடம் கிழக்கின் வேலைத்திட்டம் மூலம் மக்களுக்கு பணியாற்றி வருகின்றோம் என்று கூறிக்கொண்டு குறிப்பிட்ட இனத்தை மட்டும் பலப்படுத்திக் கொண்டு தமிழினத்தை புறக்கணிக்கும் நடவடிக்ககையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

ஒரு அரசாங்கத்தின் கடமை கிராமங்களை அபிவிருத்தி செய்வது அவர்கள் அதனை செய்துதான் ஆகவேண்டும் இதனை சிலர் தனிப்பட்ட முறையில் கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.

நாங்கள் பல தடவைகள் இந்திய அரசாங்கத்துடன் கதைத்து கொண்டு வந்த இந்திய வீட்டுத் திட்டத்தினை கூட அரசாங்க அரசியல்வாதிகள் கையிலெடுத்து வழங்கி வருகின்றனர்.

இதனை கதைத்தவர்கள் நாங்கள், இதனை கொண்டு கொடுத்துவிட்டு அவர்கள் பேரெடுக்கின்றனர். இதனை அரசாங்க பிரதியமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள் இருவர்தான் இதனை மேற்கொண்டு வருகின்றனர் தங்களது சொந்த ஊருக்குக் கூட இதனை கொடுக்கின்றார்கள் ஆனால் நீங்கள் இதில் உள்ள உண்மைத் தன்மைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.

எமது மக்கள் இன்னமும் அகதி முகாம் வாழ்க்கையில் இருந்து மீளவில்லை சம்பூர், பட்டித்திடல், மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய கிராமங்களிலே 848 குடும்பங்கள் குடியேறாமல் இருக்கின்றனர்.

கிளிவெட்டியில் இருந்த ஒரு குடும்பஸ்தர் வயல்வெளிக்கு சென்று கதிர்கள் புறக்கி களங்களுக்கு சென்று களப்பிச்சை எடுத்துத்தான் தனது குடும்பத்தை நடாத்தி வந்திருக்கின்றார். ஆனால் தொடர்ந்து வறுமை கூடிய காரணத்தினால் வாழ முடியாது என்பதற்காக தனது கழுத்தினை தானே அறுத்திருக்கின்றார். இவ்வாறான நிலைமைகள் யாருக்கு இருக்கின்றது? தமிழருக்குத்தான் இருக்கின்றது.

இன்று அகதி முகாம்களில் வாழ்கின்ற எமது மக்களுக்கு நிவாரணம் கூட 2012 ஆண்டுடன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு பட்டினிச்சாவை உருவாக்கிக் கொண்டிருப்பது யார் இந்த அரசாங்கம் தான் என்றார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template