மோடியை அழிக்க குண்டுவெடிப்பு சம்பவங்கள் ,துலங்கும் உண்மைகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த, இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற, ஜமாத் உல் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புகள், கூட்டாக சேர்ந்து, இந்தச் சதி செயலை அரங்கேற்றி இருப்பதை, தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் உறுதி செய்துள்ளனர்.

மே, 1ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின், ஒன்பதாவது நடைமேடையில், பெங்களூரு - கவுகாத்தி விரைவு ரயிலில், இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில், ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த சுவாதி பலியானார்; 14 பேர் படுகாயம் அடைந்தனர். இது, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச்சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, பெங்களூரு ரயில் நிலையம் வரை உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த போதும், அவர்களால் துப்பு துலக்க முடியவில்லை.



என்.ஐ.ஏ., விசாரணை:




லோக்சபா தேர்தல் நேரத்தில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பீகார் மாநிலம், பாட்னாவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பும், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பும் ஒரே மாதிரியாக இருந்ததால், இந்த வழக்கில் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் (என்.ஐ.ஏ.,) தீவிரம் காட்ட துவங்கினர்.

இதற்கிடையில், அக்., 2ம் தேதி, மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்திற்கு அருகே, ஒரு வீட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஷகில் அகமது, சோவன் மண்டல் என்ற இரு பயங்கரவாதிகள் இறந்தனர். படுகாயத்துடன் ஹசன் சாகிப் என்பவன் சிக்கினான்.மேலும், ஷகில் அகமதுவின் மனைவி ரஜிரா பீபி என்ற ரூமி, ஹசன் சாகிப்பின் மனைவி அமீனா பீபி ஆகியோரிடம், தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்தன.



துப்பு துலங்கியது:



ரஜிரா பீபி உள்ளிட்டோர் அளித்த வாக்குமூலம்:எங்கள் கணவர்கள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பில், அதி தீவிரமாக செயல்பட்டனர். குண்டு தயாரிப்பது குறித்து எங்களுக்கும் கற்றுத் தந்தனர்.தென் மாநிலங்களில், பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும், இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன், ஜமாத் உல் முஜாகிதீன் அமைப்பு நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, எங்கெல்லாம் பிரசாரத்திற்கு செல்கிறாரோ, அங்கெல்லாம் குண்டுகள் வைக்க வேண்டும் என்பது, இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் திட்டம். அதற்காக, எங்களிடம் இருந்து வெடிகுண்டுகளை வாங்கி செல்வர்.சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வைப்பதற்கு முன், எங்கள் கணவர்கள், கடந்த, ஏப்ரல் மாதத்தில், பல முறை, சென்னைக்கு நேரில் சென்று முன்னோட்டம் பார்த்து வந்தனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திராவிற்கு பிரசாரத்திற்காக வந்த, நரேந்திர மோடியை குறிவைத்தே, வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. காலதாமதத்தால், சென்டரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்து விட்டது.

மேலும், மேற்கு வங்க மாநிலம், பரத்வானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில், சேகரிக்கப்பட்ட, வெடிமருந்து தடயங்களும், சென்னை, சென்டரலில் சேகரிக்கப்பட்ட தடயங்களும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், ஒத்துப் போகின்றன.அதனால், லஷ்கர் இ தொய்பா ஆதரவு பெற்ற, ஜமாத் உல் முஜாகிதீன், இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் தான், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்ற, முடிவுக்கு வந்துள்ளோம். 

மேலும், சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன், சென்னையில் தங்கி உள்ள சிலருடன், பயங்கரவாதிகள் பலமுறை மொபைல் போனில் பேசியுள்ளனர். அதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளோம்.இந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template