காவல்நிலையத்தில் இளைஞர் சுட்டுக்கொலை : எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்

இராமநாதபுரம் எஸ்.பி பட்டிணத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு கடும் நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ வலியுறுத்துகிறது.


இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


’’இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான செய்யது முகம்மது என்ற இளைஞர், கைகலப்பு புகார் தொடர்பாக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சப்-இன்ஸ்பெக்டரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட நபர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதும், அவரை சுட்டுக் கொல்வதும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதை ஒருபோதும் ஏற்க இயலாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் காவல்நிலைய விசாரணையின் போது தன்னை கொலை செய்ய முயற்சித்ததால் தற்காப்புக்காக சுட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


சமீபத்தில் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரால் சிறுவன் சுடப்பட்டது முதல் பல்வேறு காவல்நிலைய மரணங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணமாகின்றன.


சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர், சட்டம் ஒழுங்கை மீறும் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களது குற்றங்களை மறைக்க முயற்சி மேற்க்கொள்வதும், குற்றவாளியான அதிகாரியை காப்பாற்றும் வகையில் அறிக்கை விடுவதும் காவல்துறை மதிப்பை கெடுக்கும் செயலாகும்.


இந்த சம்பவத்தில் பலியான செய்யது முகம்மது மீது இதுவரை எந்த ஒரு வழக்கும் இல்லை. காவல்நிலைய வாக்குவாதத்தால் ஏற்ப்பட்ட கைகலப்பில் தான் அவர் பலியானதாகவும், அந்த தாக்குதலில் செய்யது முகம்மது பலியானதால் அதனை மறைக்க துப்பாக்கியால் சுடப்பட்டு தற்காப்பு தாக்குதல் என சம்பவத்தை திசை திருப்பும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.


காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழப்பது, நீதியையே கேலிக்கூத்தாக்கிவிடும். காவல் நிலையங்களில் இது போன்ற சம்பவங்கள் இனியும் தொடருமானால் காவல்துறை மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையும் இல்லாமல் போகும்.


ஆகவே இந்த சம்பவத்தை உச்சநீதிமன்ற நெறிமுறை வழிகாட்டுதலின் படி குற்றச்செயலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மற்றும் அவருடன் துணை நின்ற காவல்துறையினரின் மீது கொலைவழக்கு பதிவு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


இந்த சம்பவத்தில் பலியான இளைஞர் கூலி வேலை செய்து தனது குடும்ப பொருளாதாரத்தை நிவர்த்தி செய்துவந்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவரின் இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என எஸ்.டி.பி.ஐ சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template