இலங்கை காலனித்துவ பிடியிலிருந்து விடுபட்டு 66 வருடங்களை எட்டிய நிலையில் இன்னும் தமிழ், முஸ்லிம் மக்கள் தம் காலனித்துவ பிடியிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை.
இந்த நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்த இரு பிரதான கட்சிகளும் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டவண்ணம் அரசியல் சட்ட யாப்புகளை மாற்றும் பணியிலும், ஒருவர் மற்றவர் மீது குற்றம் பிடிப்பதிலும், வசை பாடுவதிலும், தங்களின் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்வதிலும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலும், குடியுரிமைகளைப் பறிப்பதிலும் மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்து சட்டங்களைத் தாங்கள் நினைத்தவாறு மாற்றி தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலுமே சாதித்து வந்துள்ளன. தொடர்ந்தும் இந்த நிலையே காணப்படுகின்றது.
அத்துடன், நிறைவேற்று அதிகாரம் என்ற பெயரில் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதிக்காமல் நான் சொல்வதுதான் சட்டம். நான் செய்வதுதான் சரி. என்னை எவரும் கேள்விகள் கேட்கக்கூடாது. நான் நினைத்ததை முடித்தே தீருவேன் என்ற பாணியில் மேற்படி சகல நிறைவேற்று அதிகாரப் பதவிக்கு இரையாகிப்போன எல்லா ஜனாதிபதிகளும் ஒரு சர்வாதிகாரப் போக்குடைய நிலையில் பயணிப்பதை நாம் காணலாம்.
1947ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதி வரையிலுமே இரு பெரும்பான்மைக் கட்சிகளின் சிங்கள ஆட்சியாளர்கள், இந்நாட்டில் வாழும் 58 இலட்சம் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழ், முஸ்லிம் மக்களை ஒரு கறிவேப்பிலையாக மட்டும் பயன்படுத்திவருவதைக் காணலாம்.
நாட்டில் தேர்தல் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தங்களுக்கு மேலதிகமாகத் தேவைப்படும் வாக்குகளை நிறைவேற் றிக்கொள் வதற்காக சிறுபான் மைக் கட்சிகளின் அரசியல் தலைவர்களிடம் நடைமுறைக்குச் சாத்தியப்படாத எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். இறுதியில் தங்களின் இலக்கை அடைந்ததன் பின்னர் கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு காலத்தைக் கடத்துவதும், நீங்கள் கேட்பதையயல்லாம் தரமுடியாது. இது ஒரு பெளத்த நாடு என்பதனால் பெளத்த மகா சங்கத்தினர்களின் கட்டளையை மீறி எங்களால் எதையும் செய்யமுடியாதெனக் கையை விரிப்பதுடன், விரும்பினால் அரசுடன் இணைந்து செயற்படுங்கள், இல்லாவிடில் வெளியேறுங்கள் என அடித்துக் கூறுகின்றனர்.
நீங்கள் எங்களின் கறிக்குப் பயன்படுத்தப்படும் வெறும் கறிவேப்பிலை மட்டும்தான் என்ற பாணியில் ஓரங்கட்டி விடுகின்றனர். இதே படலம்தன் கடந்த 66 வருடங்களாக இடம்பெற்று வருவதுடன், நம்ப வைத்து ஏமாற்றப்பட்டும் வருகின்றனர். இருந்தபோதும் மேற்படி சிங்களப் பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கான எந்த உரிமைகளையும் வழங்கப்போவதில்லை என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தமிழ் மக்களுக்கான கட்சியை ஏற்படுத்தினார். சாத்வீகப் போராட்டங்களையும் சிங்கள அரசுக்கு எதிராக முன்னெடுத்தார்.
அன்றுதொட்டு இன்றுவரை சிங்கள தேசிய அரசில் இணைந்து செயற்பட்ட தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் நலன்கருதி எதையும் உருப்படியாக மேற்கொண்டது கிடையாது. காலத்திற்குக் காலம் தோன்றிய முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள தேசியவாதிகளின் நடவடிக்கை அனைத்துக்கும் ஆமாம் போடும் சாமிகளாகவே இருந்துள்ளனர்; இருந்தும் வருகின்றனர். இதன் பயனாக இவர்களின் பலவீனத்தை நன்கு அறிந்துகொண்ட இரு பிரதான பெரும்பான்மைக் கட்சிகள், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அரை அமைச்சரைக் கொடுத்தால் போதும் அவர்களைத் தம் வசமாக்கிக்கொள்ளலாம் என்ற முழு நம்பிக்கையுடன் செயற்பட்டு வருகின்றன.
இவ்வாறான இடமாற்று விந்தைகள் இன்று நேற்று உருவானதொன்றல்ல. 1972ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தொழுதுகொண்டிருந்த ஒரு முஸ்லிம் மரணமானார். இருந்தபோதும் அன்று நாடாளுமன்றை அலங்கரித்துக்கொண்டிருந்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அந்தச் சம்பவத்தைத் தட்டிக்கேட்கத் துணிவில்லாதர்களாக ‡ வாய்மூடி மெளனிகளாக இருக்க, சபையில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய தந்தை செல்வா, விசேட உரையயான்றை சபையில் ஆற்றினார்.
அந்த உரையானது பள்ளிவாசலில் இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியான விடயமாகவே மிகவும் காரசாரமான முறையில் அரசைக் கண்டித்ததாக இருந்தது. அன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தை நிராகரித்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பும் செய்தனர். இந்தச் சம்பவம் அன்றைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெட்கித் தலைகுனிய வைத்தது. அவ்வாறான செயற்பாட்டிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் தங்களின் கொள்கையில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாதவர்களாக உள்ளனர். ஆனால், இவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை. தொடர்ந்தும் இவர்கள் சிங்கள அரசுகளின் கறிவேப்பிலையாகவே செயற்படுவார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
இந்த நாட்டில் 66 வருடங்களாக தமிழ் மக்களுக்கான அரசியல் அந்தஸ்தை வழங்காத ஒரு கொடிய நோயைத் தீர்க்க முடியாமல் நாடகம் ஆடிவரும் சிங்கள தேசியவாதம் அவர்களுக்கான உரிமைகளைக் கொடுக்க நினைத்திருந்தால், 1965 காலப்பகுதியில் வழங்கியிருக்க முடியும். ஆனால், சகல சிங்கள அரசியல் தலைமைகளும் மகாசங்கத்தினர்களின் ஆதிக்கத்துக்குள் உட்பட்டு இருந்ததன் காரணமாக எந்தவொரு அரசியல் செயற்பாடுகளையும் சுயமாக செய்யமுடியாமல் நாட்களை மட்டும் கடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பொதுவாக 1944இல் உருவாக்கப்பட்ட சோல்பரி யாப்பானது ரோல் புரூட் என்பவரால் தயாரிக்கப்பட்டபோதும் 1948இல் அப்போதைய பிரதமராக விளங்கிய டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆலோசனைக்கமைய பெளத்த மதத்தை விரிவாக்கும் வகையில் திருத்தப்பட்டு நாடாளுமன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேற்படி சோல்பரி யாப்பில் சிறுபான்மை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 29 சரத்தை வெறுமனே விட்டுவிட்டதுடன், காலபோக்கில் அதில் குறிப்பிட்டபடி சிறுபான்மையினர்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியோடு நின்றுவிட்டன.
டி.எஸ்.சேனாநாயக்கவின் மறைவுக்குப்பின் டட்லி சேனாநாயக்க நாட்டின் பிரதமராக விளங்கினார். ஆனால், அவரால் ஒருவருடம் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், அவரது பதவி சேர்.ஜோன் கொத்தலாவெலவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருந்தும் கொத்தலாவெலவால் எதுவும் செய்யமுடியவில்லை. 1956இல் இந்நாட்டின் பிரதராகப் பதவியேற்ற எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கதான் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்ற காரணத்தால் தமது தேர்தல் பிரசாரத்திற்கு சிங்கள மயமாக்கல் சட்டத்தைப் பிரயோகப்படுத்தினார். இதன் காரணமாக இனச்சுத்திகரிப்புக்கு வித்திட்டதுடன் பண்டா -செல்வா ஒப்பந்தமும் இறுதியில் கிழித்தெறியப்பட்டது.
1960ஆம் ஆண்டு நாட்டின் தலைமையை ஏற்றுக்கொண்ட திருமதி சிறிமா பண்டாரநாயக்க தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நிலையைத் தோற்றுவித்தார். அத்துடன், சிறிமா ‡ சாஸ்திரி ஒப்பந்தம் வாயிலாக பல நூற்றுக்கணக்கான இந்திய நாட்டவர்களை இலங்கையிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றினார். 1965ஆம் மீண்டும் டட்லி சேனாநாயக்க பதவியேற்றார். அன்றும் வட்ட மேசை மாநாடு, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டபோதும், வடக்கு, கிழக்கில் குறைந்தபட்ச அதிகாரத்துடன் சுயாட்சி ஒன்றை வழங்க டட்லி விருப்பம் தெரிவித்தபோதும் மகாசங்கத்தினர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இறுதியில் அப்படி எதுவும் வழங்கமுடியாதென உறுதியாகக் கூறிவிட்டார்.
1970ஆம் ஆண்டு மீண்டும் இந்நாட்டில் சிறிமாவின் கூட்டணியான முன்னணி பதவியேற்றது. அன்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளையும் வழங்குவோம் என்று கூறியே அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால், 1972இல் வரையப்பட்ட இலங்கையின் குடியரசாக்கல் யாப்பில் சிறுபான்மை மக்களுக்கான 29ஆவது சரத்தை முற்றாக இல்லாமல் செய்தனர். 1977ஆம் ஆண்டு ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.கட்சி நாட்டின் அதிகாரத்தை ஏற்றது. இருந்தும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்யவென நன்கு திட்டமிட்ட முறையில் 1978இல் மற்றுமொரு அரசியல் யாப்பை உருவாக்கியது. நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் அதிகாரம் அனைத்தையும் சகல நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியதுடன் நாட்டின் சகல விடயங்களும் ஒரு தனிநபரின் ஆதிக்கத்துக்குள் சவாரிசெய்ய தொடங்கியது.
மேற்படி சட்ட யாப்பில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தும் 6ஆவது சரத்தை இணைத்து, எந்தச் சட்டமானாலும் 2/3 பெரும்பான்மை என்ற நிலையைத் தோற்றுவித்ததுடன் சிறுபான்மை மக்களுக்கான சகல உரிமைகளும் சலுகைகளும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டன. அத்துடன் ஜயவர்தன நின்றுவிடவில்லை. 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றின் எதிர்க்கட்சியாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அங்கம் வகித்த காரணத்தை வைத்து தொகுதிவாரியான தேர்தலை இல்லாமல் செய்தார். விகிதாசார தேர்தல் முறையை கொண்டுவந்தார். விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியபோது யுத்தம் என்றால் யுத்தம், சமாதானம் என்றால் சமாதானம் என எச்சரிக்கை செய்தார்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துப்பட்ட வன்செயலை அன்றைய நிறைவேற்று அதிகாரம் கை கட்டிப் பார்த்துக்கொண்டிருந்ததையும் நாம் அறிவோம். 1987இல் இந்திய ‡ இலங்கை உடன்படிக்கையில் முஸ்லிம் மக்களைப் புறக்கணித்த விடயம் பற்றி அன்றைய அமைச்சர்களான ஏ.ஸீ.எஸ்.ஹமீட், எம்.எச்.முகம்மத் போன்றவர்கள் கேள்வி கேட்டபோது, ஜயவர்தன அவர்கள் மீது பாய்ந்து விழுந்ததுடன், “எனது அமைச்சரவையில் இருக்க விரும்பினால் இருங்கள். இல்லாவிட்டால் வெளியேறுங்கள்” எனக் கண்டித்தார்.
இதன் பின்னர் 1988இல் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாஸ, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனக் கருதி போராளிகளுடன் மனம் விட்டுப் பேசலானார். இருந்தபோதும் துரதிர்ஷ்டவசமாக படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் பதவியேற்ற டீ.பீ.விஜயதுங்க சிறுபான்மை மக்கள் மரத்தைச் சுற்றி படரும செடி, கொடியயன வர்ணித்தார். பதவிக்கு வந்த சந்திரிகா இந்நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று கிடையாதென்றும் ஒருசிறு குழுவினர்களே ஆயுதமேந்தி நாட்டையும் நாட்டு மக்களையும் குழப்புகின்றனர் என்று கூறியதுடன் ஆயுதப் போராளிகளுக்கு தமது அரசு ஒருபோதும் அடிபணியாது என்றார். தமிழ் மக்களுக்கான தீர்வுப்பொதியை செல்லுபடியற்றதாக்கினார்.
2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ரணில் பிரதமராக பதவியேற்றதும் போராளிகளுடன் மனிதாபிமான அடிப்படையில் சமாதான உடன்படிக்கையில் ரணிலும், நோர்வேத் தூதுவர் சொல்யஹய்மும் கைச்சாத்திட்டனர். 2002 பெப்ரவரியிலிருந்து 2004 ஏப்ரல் வரை நாட்டில் சாதாரண சூழ்நிலை நிலவியது.
இவ்வாறான ஒரு நிலையில், ரணில் விக்கிரமசிங்க நாட்டை விடுதலைப்புலிகளிடம் ஒப்படைத்துவிட்டார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி 2004இல் நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன், மற்றுமொரு தேர்தலுக்கு உத்தரவிட்டார். 2005இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கிய மஹிந்த ராஜபக், போராளிகளுடன் புரிந்துணர்வொன்றை ஏற்படுத்தினார். ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வைக் காண்பேன் என்று கூறினார்.
முன்னர் இருந்த சிங்களத் தலைவர்கள் விட்ட தவறை நான் செய்யப்போவதில்லை என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால், பதவியேற்றதும் தனது நிலையை மாற்றிக்கொண்ட ராஜபக்ச சற்றும் எதிர்பாராத முறையில் புலிகளின் அணி தோல்வி காணத் தொடங்கியது. 2009 மனிதாபிமான யுத்தம் முடிவுக்கு வந்ததும் ராஜபக்வின் மனநிலையில் பாரிய மாற்றம் காணப்பட்டது. இனிமேல் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது. இது ஒரு பெளத்த பூமி. இதனை எவருக்கும் கூறுபோட ஒருபோதும் அனுமதியேன் என்ற பாணியில் தனது நடவடிக்கையை மேற்கொண்டார்.
விடுதலைப்புலிகளை இல்லாமல் செய்த ராஜா நானே என்ற நிலையில் சகல மக்களின் மத்தியிலும் அலங்கரிப்பதுடன், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகியும் சிங்களப் பெரும்பான்மை மக்களின் 65 இலட்சம் வாக்குகள் எனது சட்டைப்பைக்குள் இருப்பதால் சிறுபான்மையினர்களின் எந்த பக்க பலத்தையும் எதிர்பார்க்கவேண்டிய தேவையில்லையயன்ற பாணியில் கடந்த காலங்களில் செயற்பட்ட சிங்கள அரசியல் தலைமைகள் செய்த அல்லது விட்ட தவறுகளை விடவும் தற்போதைய ஜனாதிபதி ராஜபக் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் மகா பெரிய தவறைச் செய்துவருவதாகவே தென்படுகின்றன.
இந்த அடிப்படையில் நாம் பார்க்கும்போது ஐ.தே.கட்சியோ, ஸ்ரீல.சு.கட்சியோ இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கான எந்த உரிமைகளையும் வழங்கமாட்டாது என்பதை கடந்த 66 வருடங்களாகக் கண்டறியப்பட்ட உண்மை விடயமாகும். ஆகவே, இரு பிரதான கட்சிகளும் ஒரு குளத்தில் விளைந்த மீன்கள்தான் என்பதைச் சித்திரித்துக் காட்டுகின்றன. இதுதான் யதார்த்தம்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment