வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை உடையவர்கள் வடக் கிற்கு செல்வதற்கு தடை

 கிளிநொச்சியில் இடம்பெற்ற வைப வமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி கொடிய பயங் கரவாத யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ததன் மூலம் மக்களை மீட்டு நிம்மதியாக வாழவைத்திருப்பதாகவும் 30 வருடங்கள் அனுபவித்த கஷ்டங்கள் நீங்கி இப்போது மக்கள் நிம்மதியாக வாழ்வதாகவும் இதுவே தமது எதிர்பார்ப்பு என்றும் நிச்சயமாக மக்களுக்கு உதவுவோம் என்றும் மக்கள் எப்போதும் தம்மை நம்பலாம் எனவும் குறிப்பிட் டிருந்தார்.

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலமாக காலகாலமாக பேசப்படும் யாழ்தேவியின் மீள்வருகையும் ஜனாதிபதி கிளிநொச்சியில் பேசிய வார்த்தைகளில் தொக்கிநிற்கின்ற விடயப்பரப்பும் அடை யாளரீதியில் நல்ல விடயங்களாக நோக்கப்பட முடியும். ஆனால், சொல்வதொன்று, செய்வது வேறொன்று என்ற காலம் தந்த ஞானத்தின் அடிப்படையில் நோக்குகின்றபோது நம்பிக்கையீனங்களே நாளுக்கு நாள் அதிகரிக்க வழி வகுக்கப்பட்டுள்ளமை புலனாகும்.

வடக்கிலுள்ள மக்கள் தம்மை நம்பலாம் என்று கூறும் அரசு சுற்றுலாப்பயணிகள் உட்பட வெளிநாட்டு கடவுச்சீட்டு உள்ளவர்கள் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு காலவரையறையற்ற தடையை விதித்துள்ளமை தமிழர் கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை தமது பிரதேசத்தில் எதிர் நோக்கியிருப்பதனையே காண்பிக்கின்றது.

ஜனாதிபதி வடக்கிற்கான பயணத்தை மேற்கொண் டுள்ள தறுவாயில் இந்த முன்னெச்சரிக்கையற்ற அறிவிப்பு வெளியாகியுள்ளமை ஜனாதிபதியின் விஜயத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தொடர்புபடுத்தப்பட்டதாக ஆரம் பத்தில் செய்திகள் வந்தாலும் பின்னர் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிவந்துள்ள செய்தி களின்படி தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்ற வெளிநாட்டு கடவுச்சீட்டுக் களையுடைய சிலரினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே இந்தத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருந்தவர்கள் வெள்ளியன்று ஓமந்தைச் சோதனைச்சாவடியைச் சென்ற டைந்தபோதே இந்தத் தடை தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய நிலைமையானது இந்த நாட்டில் நிலையான கொள்கையோ திட்டமிடலோ கிடையாது என்பதைக் கோடிட்டுக்காட்டுவதற்கான மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.

போருக்குப் பின்னர் வடக்கிற்கு விஜயம் செய்கின்ற வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊர் பார்க்கும் சுற்றுலாப்பயணிகள் அல்ல, மாறாக வடக்கைப் பூர்வீகமாகக்கொண்ட அங்கு உறவுகளையும் நிலபுலன் களையும் உடைய தமிழர்களே.

இப்படியிருக்க அதிரடியாக போடப்பட்டுள்ள தடையால் பாதிக்கப்பட்டுள்ள ‡ பாதிக் கப்படப்போகும் பெரும்பாலானவர்கள் தமிழர்களாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஜனாதிபதி தனது உரையில், நீங்கள் எங்களை எப் போதும் நம்பலாம், நாம் உங்களை நம்புகின்றோம் என்று கூறியது வெறுமனே உதட்டளவில் மட்டும்தானா? உண்மையில் தமிழர்களை அவர் நம்பத்தயாராக இல்லையா? இன்னமும் அவர்கள் பயங்கரவாதிகள் தானா என்ற கேள்விகளையும் இந்தத் தடை எழுப்பி நிற்கின்றது.

மரணச்சடங்குள், திருமணவைபவங்கள், மதச்சடங்குகளில் பங்குபற்ற வந்தவர்களும் இந்தத்தடையால் பாதிக் கப்பட்டுள்ளனர் என வரும் செய்திகள் நம்பிக்கைகளை கட்டியயழுப்பவோ, இடைவெளியைக் குறைப்பதற்கோ உதவப்போவதில்லை என்பதை அரசு தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை உடையவர்கள் வடக்கிற்கு செல்வதற்கு யுத்தகாலப்பகுதியில் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ச்சியான வெளிநாட்டு அழுத்தங்களின் மத்தியில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நீக்கப்பட்டி ருந்தது. இந்த தடைநீக்கத்தைப் பயன்படுத்தி பெருந்திர ளானோர் பாதுகாப்புக் கெடுபிடிகளையும் பொருட்படுத்தாது விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற நல்லூர் கந்தனின் திருவிழாவிலும் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

அப்படியிருக்க திடீரென மீண்டும் தடைபோட்டிருப்பது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் புலிப்பீதியை ஏற்படுத்தி தென்பகுதி மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தா அன்றேல் ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசா ரணைகளுக்கு ஒத்துழைக்க தொடர்ச்சியாக மறுத்துவரும் நிலையில் இங்கு வருகைதரும் வெளிநாட்டவர்கள் ஊடாக ஆதாரங்கள் உரிய இடங்களுக்கு சென்று விடும் என்ற அச்சமா என்ற கேள்விகளும் எழுகின்றன.

வடக்கிற்கும் தெற்கிற்கும் பாலமான யாழ்தேவி 24 வருடங்களுக்கு பின்னர் வருகின்றது என ஊடகங்களில் பெரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டு வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை திடீரென தடைசெய்திருப்பது அரசு கடைப்பிடித்துவரும் இரட்டைவேடக் கொள்கையைப் பறைசாற்றுகின்றது.

உணர்வற்ற உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முதன் மைப்படுத்தி பெயரைச் சம்பாதிக்க பகிரதப்பிரயத்தனம் செய்யும் அரசு உணர்வுபூர்வமான விடயங்களில் உண்மையாகச் செயற்படமறுப்பது நிச்சயமாக அதன் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கப்போவதில்லை. எனவே, காலம் கடந்தேனும் ஞானம் பெற்று மக்களின் உணர்வு பூர்வமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசு இனி யேனும் முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டும்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template