இராமேசுவரத்தில் இருந்து கடந்த 6 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்களின் இயந்திர படகு பழுதடைந்த காரணத்தால் நடுக்கடலில் தத்தளித்த போது, அவர்களை இலங்கை கடற்படையின் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இலங்கை இராணுவத்தினரின் இந்த செயல் வருத்தம் அளிக்கிறது.
தமிழக மீனவர்கள் கடத்தப்படும் இந்த போக்கை உடனடியாக தாங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள சிறைகளில் 20 மீனவர்கள் ஏற்கனவே சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
மேலும் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கை வசம் உள்ளது. அந்த படகுகளை திரும்ப தராததால் தமிழக மீனவர்களிடம் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் அவர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
எனவே மழை காலம் தொடங்கும் முன்பு மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அந்த 75 படகுகளையும் மீட்க உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 10 இலட்சம் மீனவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்கள் தலைவர் புரட்சித்தலைவி அம்மா சொன்னதுபோல அவரது தலைமையிலான தமிழக அரசு ஏற்கனவே ஏராளமான மீனவர் நலத்திட்டங்களை செய்துள்ளது.
நீண்ட காலமாக தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் பிரச்சினையை தீர்க்க எங்கள் தலைவி 2 விதமான அணுகுமுறைகளை சொல்லி உள்ளார். ஒன்று நிதி திட்டங்கள், இரண்டாவது கச்சதீவை மீட்டு அந்த பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்று தர வேண்டும் என்பதாகும். கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்கள் இழந்து உள்ளதால் கடும் வருத்தம் அடைந்துள்ளனர்.
எனவே தாங்கள் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்கள் தலைவர் புரட்சித் தலைவி அம்மா ஏற்கனவே விடுத்துள்ள வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் கச்சதீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இலங்கை சிறைகளில் உள்ள 24 மீனவர்களையும், 75 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உரிய அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment