வடமாகாண சபைக்குள் பிளவு ?

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்ற பிரேரணை வடக்கு மாகாணசபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


'தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இங்கு இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டும், வட மாகாணசபை அது தொடர்பான தனது பிரேரணையை கடந்த ஐந்து மாதங்களாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது என்று சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

'இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை நடத்திவருகின்ற விசாரணைகள் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் முற்றுப் பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில்' இந்தப் பிரேரணை முக்கியத்துவம் பெற்றிருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிவாஜிலிங்கத்தின் பிரேரணையானது தேசிய அளவில் முக்கியத்துவம் மிக்கது என்பதால் தன்னால் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்பதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு அதனைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

கூட்டமைப்பின் தலைமை இது தொடர்பாக அதன் இணைப்புக்குழு கூட்டத்திலும் உயர்மட்டக் கூட்டத்திலும் ஆராய்ந்து 11 விடயங்களை உள்ளடக்கி முதலமைச்சருக்குத் தெரிவித்திருந்ததாகவும் சிவஞானம் கூறினார்.

'கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில், இனப்படுகொலை என்ற சொற்பதம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருந்த தலைவர் சம்பந்தன், இந்தப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான சமயம் இதுவல்ல என கூறியிருந்தார். இதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடும் ஆகும்' என்றார் சிவஞானம்.
Share this movie :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. tamiltvshows - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Free Blogger Template