காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் சுந்தர் தலைமையில் காஞ்சீபுரத்தில் நடந்தது.
மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.வி.எம்.அ.பொன்மொழி, எட்டியப்பன், மல்லிகா மோகன், பொருளாளர் சுகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3½ ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கொலை–கொள்ளை, வழிப்பறி, தாலி செயின் பறிப்பு குற்றங்கள் பெருகி சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு கிடக்கிறது. மின் தட்டுப்பாடால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்வால் சாதாரண நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் தொழிலாளர்கள் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்த அவலங்களை மக்கள் மத்தியில் சுட்டி காட்ட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை செயல்படுத்தும் விதமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடர் பொதுக் கூட்டங்களும், மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் மாவட்ட கழகம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.
ஸ்ரீபெரும்புதூரில் 2006–ம் ஆண்டு தொடங்கப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை நவம்பர் 1–ந் தேதி முதல் மூடப்போவதாக அறிவித்துள்ளனர். இங்கு பணியாற்றும் 8500 நிரந்தர தொழிலாளர்கள், 6 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட இதன் சார்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்தம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய – மாநில அரசுகள் ஆலை மூடலை உடனே தடுத்து நிறுத்த வலியுறுத்தி வருகிற 17–ந் தேதி காலை 9.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நாளை வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலை வைத்து வீடு வீடாக சென்று சரிபார்ப்பதுடன், 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தீர்ப்பின் நகலை துண்டு பிரசுரமாக அச்சிட்டு வீடு வீடாக வழங்க வேண்டும். திண்ணைப் பிரசாரம், தெருமுனை பிரசாரம் செய்து அ.தி.மு.க.வினரின் பிரசாரங்களை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவற்றை விளக்கி மாவட்டச் செயலாளர் தா.மோ அன்பரசன் பேசினார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் மு.சண்முகம் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்ட கழகத்தினரும், தொ.மு.க. தொழிலாளர்களும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் விசுவநாதன், சன் பிராண்ட் கே.ஆறுமுகம், ஜானகிராமன், பழனிச்சாமி, இப்ராகிம், நந்தகுமார், ஞானசேகரன், பாண்டுரங்கன், மலர்விழி, ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மணி, தண்டபாணி, படப்பை மனோகரன், பாலவாக்கம் விசுவநாதன், குமார், அன்புச்செழியன், நகரச் செயலாளர்கள் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, ஆலந்தூர் குணா, சேகர், வே.கருணாநிதி ஜெ. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, பெருங்குடி ரவிச்சந்திரன், லோகநாதன், ஜெயக்குமார், சோழானூர் ஏழுமலை ஜனனி ராஜா, காஞ்சி செல்வி செங்கை சந்தியா, அபிபுன்னிசா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment