நாட்டில் இராணுவ படை உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியில் மூன்று தசாப்தத்தினை யுத்தத்திற்கே செலவழித்து விட்டோம். இனிவரும் காலங்களில் தீவிரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமாயின் நாட்டிலுள்ள சகல இராணுவ முகாம்களை பலப்படுத்த வேண்டும் என இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்தார்.
மனிதாபிமான ஆட்சியினை நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கத்தின் கீழ் நூறு பிரபாகரன்கள் உருவாகினாலும் அழிக்க முடியும். நந்திக்கடல் யுத்தம் எமக்கு பெரிய விடயமல்ல எனவும் குறிப்பிட்டார். இலங்கை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இராணுவ உரையினை நிகழ்த்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது உரையில் மேலும் குறிப்பிடுகையில்;
இலங்கையில் இராணுவப்படைகள் உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இந்த 65 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கிலான இராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக சேவையாற்றுகின்றனர். எனினும் கடந்த முப்பது வருட காலம் இந்த நாட்டில் கொடூரமான பயங்கரவாதமொன்று நிலவியது. நாட்டையும் மக்களையும் பாதித்தது மட்டுமல்லாது பொருளாதார வர்த்தக செயற்பாடுகளையும் தடை செய்யும் வகையில் இவ்பயங்கரவாதம் செயற்பட்டது. எனவே மூன்று தசாப்த காலம் அச்சுறுத்தலாக விளங்கிய கொடிய தீவிரவாதத்தினை அழித்து இன்று எமது இராணுவ வீரர்கள் நாட்டை சுதந்திரமான தேசமாக மாற்றியமைத்துள்ளனர்.
மேலும், இந்த மூன்று தசாப்த காலமாக எமது இராணுவ வீரர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கெல்லாம் இப்போது பலன் அனுபவிக்க வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் யுத்தத்தில் தியாகம் செய்து கொண்ட இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் உபாதைகளுக்கு உள்ளான இராணுவ வீரர்களுக்குமான வாழ்வாதார மற்றும் அடிப்படை உதவிகளை செய்து கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மஹிந்த சிந்தனையின் கீழும் அதேபோல் பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி செயற்திட்டங்களின் கீழும் இராணுவ வீரர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்த போதிலும் தொடர்ந்தும் இந்த நாட்டினை பாதுகாக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உள்ளது. அந்நிய தீய சக்திகளிடம் இருந்து எமது நாட்டினை பாதுகாத்து கொள்வதற்காகவும் இராணுவத்தினரை பலப்படுத்திக் கொள்வதற்காகவும் நாட்டில் உள்ள சகல இராணுவ முகாம்களையும் பலப்படுத்த வேண்டும். அதற்கான சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்பு செயலாளரும் ஜனாதிபதியும் மேற்கொள்வார்கள்.
அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அப்பால் அவர்களின் மனிதாபிமான செயற்பாடுகளும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. மூவின மக்களின் பாதுகாப்பு, அபிவிருத்திகள் என பல விடயங்களில் இவர்கள் நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். எனவே, இவை தொடரும் வகையில் ஒரு பிரபாகரன் அல்ல நூறு பிரபாகரன்கள் இந்த மண்ணில் தோன்றி நாட்டை பிரிக்க நினைத்தாலும் நாட்டிற்கு எதிரான அனைவரையும் அழித்து இந்த நாட்டை காப்பாற்ற முடியும். சிறந்த தலைவர்களின் வழிகாட்டல் இருப்பதால் நந்திக்கடல் யுத்தம் அல்ல எந்த யுத்தமும் எமக்கு பெரிய விடயமல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

.jpg)
.jpg)

.jpg)






Post a Comment